இன்று ‘மீசைக் கவிஞன்’ என்றும் ‘முண்டாசு கவிஞன்’ என்றும் தமிழ் இலக்கிய உலகம் போற்றும் பாரதியாரின் பிறந்த தினம். ( டிசம்பர் 11,1882).
சுப்ரமணிய பாரதியார் அவர்கள், சின்னசாமி ஐயருக்கும், இலட்சுமி அம்மாளுக்கும் மகனாக 1882 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள எட்டயபுரத்தில் பிறந்தார்.
இவர் சமஸ்கிருதம், வங்காளம், இந்தி, ஆங்கிலம் போன்ற பிறமொழிகளிலும் தனி புலமைபெற்று விளங்கினார். ‘யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்’ என்று தம் தாய்மொழியாம் தமிழ்மொழியின் பெருமையை வெளிப்படுத்தினார்.
விடுதலைப் போராட்டக் காலத்தில் தேசிய உணர்வுள்ள பல்வேறு கவிதைகளைப் படைத்து மக்களை ஒருங்கிணைத்த காரணத்தால், பாரதி “தேசிய கவியாக” அனைவராலும் போற்றப்பட்டார். “ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம்” என்று சுதந்திரம் அடைவதற்கு முன்பே தன்னுடைய சுதந்திரத் தாகத்தை தன் பாட்டின் மூலம் வெளிப்படுத்தியவர், மகாகவி சுப்பிரமணிய பாரதியார்.
இவர் பிறந்த எட்டயபுரத்தில், பாரதியின் நினைவாக மணிமண்டபமும் அமைக்கப்பட்டு இவருடைய திருவுருவச் சிலையும் வைக்கப்பட்டுள்ளது. உலகத்தமிழர் நாவில் மக்கள்கவி பாரதியாரின் பெயர் அடிக்கடி உச்சரிக்கப்படுகிறது என்றால் அது மிகையாகாது.